Saturday 3 February 2018

கிராமத்தில் வாழ்ந்து அரசு பள்ளியில் பயின்று தான் IRS ஆன வெற்றியின் ரகசியம் என்ன ?

பள்ளியில் படிக்கும்போதே ஆழமாக பாடங்களை படித்தால்  IAS தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்

இணை ஆணையாளர் மாணவர்களுடன்  கலந்துரையாடல் 


 

IAS,IRS போன்ற பதவிகளோடு வேறு என்ன பெரிய இந்திய ஆட்சி பணிகள் உள்ளன? அவற்றிற்கு இளம் வயதில் இருந்து எவ்வாறு தயராவது ? 



ஜிஸ்டி தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு 

 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஜிஸ்டி தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற என்ன படிக்கலாம் என்பது தொடர்பாகவும் இணை ஆணையாளருடன்  மாணவர்கள்  கலந்துரையாடல் நடைபெற்றது.

                                           நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.இணை ஆணையாளரின் மனைவி  விமலாதேவி முன்னிலை வகித்தார்.மதுரை மண்டல மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை இணை ஆணையாளர் பாண்டிராஜா தலைமை தாங்கி மாணவர்களிடம் பேசும்போது,பள்ளி பருவத்திலே படிக்கும் பாடங்களை நன்றாக படிக்கவும்.அவற்றில் வரும் பாடங்கள் தான் பிற்காலத்தில் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் அதிகம் கேட்கப்படுகிறது.ஆர்வமாக,ஆழமாக படியுங்கள்.நானும் உங்களை போன்று கிராமப்புறத்தில் வாழ்ந்து,அரசு பள்ளியில் படித்துதான் இன்று இந்திய வருவாய் துறை பணியில் உள்ளேன்.நீங்களும் முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று பேசினார்.நந்தகுமார்,ராஜேஷ்,காயத்ரி,வெங்கட்ராமன்,கோட்டையன் ,உமாமகேஸ்வரி,நித்தியகல்யாணி ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து லெட்சுமி செய்து இருந்தார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஜிஸ்டி தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற என்ன படிக்கலாம் என்பது தொடர்பாகவும் இணை ஆணையாளர்  பாண்டிராஜாவுடன் மாணவர்கள்  கலந்துரையாடல் நடைபெற்றது.



மேலும் விரிவாக :  
                                       தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஜிஸ்டி தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற என்ன படிக்கலாம் என்பது தொடர்பாகவும் மதுரை மண்டல மத்திய சரக்கு மற்றும் சேவை வரி துறை இணை ஆணையாளர்  பாண்டிராஜாவுடன் மாணவர்கள்  கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய விஷயங்கள் :

IRS ஆன வெற்றியின் ரகசியம் என்ன ?

                                      

                                           கிராமத்தில் பிறந்து , அங்கேயே வளர்ந்து , அரசு பள்ளியில் படித்து தான் இப்போது இந்த துறையில் பணிக்கு வந்துள்ளேன்.எனவே வாழ்க்கையில் இப்படித்தான் நடக்கும் என்று எதையுமே சொல்ல இயலாது.பள்ளியில் நாம் படிக்கும்போது வைத்திருக்கும் இலக்குகள் பின் நாட்களில் மாறலாம்.ஆதியில் மனிதன் பிறந்த பொழுதே எதுவுமே இருந்திருக்காது.ஆதி மனிதனுக்கு உலகமே மாயமாக தோன்றியிருக்கும்.கற்பனையில் காரணத்தை தேடி கடவுள் என்ற ஒன்றின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கக்கூடும்.

ஆழமாக படித்தல் :
                                    படிப்பு என்பது நாம் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அனைத்தையும் ,எல்லாப் படத்தையும் கற்றுக் கொள்கிறோம்.அதற்குப் பிறகு படிப்பதை ,நமக்கு எதில் அதிக ஆர்வமும்,ஈடுபாடும் ,விருப்பமும் உள்ளதோ அதையே எடுத்துப்படிக்க வேண்டும்.பத்தாம் வகுப்பிற்கு பிறகே நம்மிடம் உள்ள திறமையை கொண்டு யோசிக்க வேண்டும்.
                              
                            அதிக மதிப்பெண் பெறுவதால் ஒன்றும் பெரிய விஷயமில்லை.மனப்பாடம் செய்து படித்து அதன் வழியாக அதிக மதிப்பெண் எடுத்து எந்த பயனும் இல்லை.எதனை படித்தாலும் புரிந்து படித்து கொள்ளுங்கள்.புரிதலுடன் படித்தாலே மிக எளிதாக நாம் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

IAS தொடர்பாக :
 
                          IAS படிக்கும்போது பொதுவாக சொல்வது என்னவென்றால் ,வானத்துக்கு கீழே உள்ள அனைத்தையும் தெரிந்து படித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.அது உண்மைதான்.நீங்கள் இளம் வயது முதலே தினசரி செய்தி தாள் படிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.அதிகமாக புத்தகங்கள் படியுங்கள்.பள்ளியில் உள்ள சமூக அறிவியல் பாடங்கள் நமக்கு இந்திய ஆட்சி பணி தேர்வுக்கு படிக்கும்போது அதிக அளவில் பயன்படுகிறது.எனவே பள்ளியில் படிக்கும்போதே  பாடங்களை நன்றாக ,ஆழமாக படித்து கொள்ளுங்கள்.            

மாரத்தான் பந்தயமும்,போட்டி தேர்வுகளும் :
 
                         பொதுவாக போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்கள் சென்னை அல்லது டெல்லி போன்ற பெரு நகரங்களுக்கு சென்று விடுவது நல்லது.இங்கு நம் ஊர்களில் நம்முடன் ஓடுபவர்கள் மிக குறைவு.சென்னை போன்ற நகரங்களில் அரசின் பயிற்சி மையங்கள் உள்ளன.அவற்றிற்கு நுழைவு தேர்வுகள் எழுதி மையத்தின் உள்ளே சென்று சேர்ந்தால் நம்முடன் அதிகமானோர் மராத்தான் ஓட்ட பந்தயம் ஓடுவது போல் பல்வேறு வகைகளில் நமது போட்டியாளர்களை அறிந்து நாமும் ஓடி வெற்றி பெற எளிதாக இருக்கும்.

மக்களுக்கான நேரடி சேவை :
 
                                  கிராமங்களில் பிறந்து,வாழ்ந்து,அரசு பள்ளியில் படித்து இது போன்று இந்திய அரசின் ஆட்சி பணிக்கு வரும்போது நம்மால் மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. IRS ஆக பத்து ஆண்டுகள் மக்களுக்குச் பணியாற்றி சேவை செய்துள்ளது  திருப்தியாக  உள்ளது.

                                 பொருளாதார நிலைமைக்காகப் படிக்காமல் படிப்பில் அளவு கடந்த ஆர்வம் எடுத்துப் படித்தால் பெரிய,பெரிய தலைவர் அளவுக்கு கூட எளிதாக உருவாகலாம்.IAS.IPS ,IRS எல்லாவற்றுக்கும் ஒரே தேர்வுதான் .போட்டி தேர்வுகளில் நாம் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்தே நமக்கு பதவிகள் கிடைக்கும்.

தோல்விகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் :
 
                                  பெற்றோர்,ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்.தெரிந்து தவறு செய்தல் கூடாது.தெரிந்து செய்தாலும் அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.வெற்றி பெற்றவர்களை பாராட்டும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.தோல்வி,ஆபத்துகளை கண்டு பயப்படுதல் கூடாது.போட்டி,பொறாமை கூடாது.யாரையும் தவறாகவோ,குறைவாகவோ மதித்து எடைபோடுதல் கூடாது.

வழிகாட்டும் உங்கள் பள்ளி :
 
                                  முயற்சி செய்து படித்தல் வேண்டும்.எதுவும் கிடைக்கவில்லை என்றால் ஏமாற்றம் அடைந்து விட்டதாகவோ ,வருத்தப்படவோ கூடாது.நான் படிக்கும் காலங்களில் உங்கள் பள்ளியில் செய்வது போன்று இந்திய ஆட்சிப்பணி தொடர்பாகவோ,மற்ற போட்டி தேர்வுகள் தொடர்பாகவோ யாரும் வழிகாட்டவோ,ஆலோசனை சொல்லவோ, விழிப்புணர்வு கொடுக்கவோ யாரும் இல்லை.நானாக முயற்சி எடுத்து ,பல்வேறு விதமான போராட்டங்களுக்கு நடுவில் வாழ்க்கையில் ஆட்சி பணிக்காண தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றுள்ளேன்.நான் போட்டி தேர்வுகள் எழுதும்போது இந்திய ஆட்சி பணியில் இருந்த எனது நண்பர் ஒருவரை சந்திப்பேன்.அவர் கொடுத்த ஊக்கமும் நான் வெற்றி பெறுவதற்கு ஒரு காரணம் .எனவே நீங்கள் இப்போதே உங்களுக்கு உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றிக்கான வழிகளை தொடர்ந்து தேடி கொண்டே இருங்கள்.நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.

ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் :
                              ஆசிரியர்கள் தான் கள்ளம்,கபடம் இல்லாதவர்கள்.அன்பு காட்டக்கூடியவர்கள்.ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்களிடையே எளிமையாக கற்றுக் கொடுக்க வேண்டும்.மதிப்பெண்களை ஆக்கபூர்வமான திறமைகளுக்கும் ,செயல்களுக்கும் வழங்குதல் வேண்டும்.அப்துல் காலம் ஒரு விஞ்ஞானி.சாதாரண முறையில் படித்து பல கண்டுபிடிப்புகளை செய்து ,எளிமையக அனைத்து மக்களையும் அரவணைத்து சென்றதால் மக்கள் விஞ்ஞானி ஆனார்.அதற்கு காரணம் பள்ளி படிப்பில் இருந்தே அவருக்கு மக்களை அரவணைத்து செல்லும் பண்பு ஏற்பட்டதே ஆகும்.எனவே மாணவர்களை ஆக்கபூர்வமானவர்களாக மாற்றுங்கள்.

ஆங்கில வழி கல்வியில் படித்தால்தான் வெற்றி கிடைக்குமா?
                                        
                              ஆங்கில வழி கல்வியில் படித்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பது மாயை.என்னை எடுத்து கொள்ளுங்கள் .கிராமத்தில் பிறந்து,அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வியில் படித்து IRS ஆக  உங்கள் முன்பு தற்போது பேசி கொண்டு உள்ளேன்.எனக்கும் ஆங்கில வழி கல்வி பயில்பவர்களை பார்த்து நான் படிக்கும் காலத்தில் மோகம் இருந்தது.ஆனால் அது ஒரு மாயை மட்டுமே.எங்கு படித்தாலும் நீங்கள் படிப்பதுதான் முக்கியம்.நீங்கள் சில மாதங்கள் வெளி மாநிலத்தில் இருந்தால் தானாக ஆங்கிலம்,ஹிந்தி இரண்டையும் பேச ஆரம்பித்து விடுவீர்கள்.
                            

ஜி .எஸ்.டி .வரி தொடர்பாக விளக்கம் :
 
                     நாடு முழுவதும் ஒரே வரிதான்.நாம் செலுத்தும் வரியில் 50 சதவிகிதம் மத்திய அரசுக்கும்,50 சத விகிதம் மாநில அரசுக்கும் அனுப்பப்படுகிறது.அதிகமாக வரி மகாராஷ்டிரா ,குஜராத்,கர்நாடகம்,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெறப்படுகிறது.மக்களிடையே சரியான புரிதல் இல்லாததாலும் ,ஜி .எஸ்.டி வரியை வைத்து சிலர் மற்றவர்களை ஏமாற்றுவதாலும் இந்த வரி பெரிய விஷயமாக பேசப்படுகிறது.முன்பு எல்லாம் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வரி விதிப்பில் இருந்தது.நம் தமிழ்நாட்டில்  ஒரு பொருளின் விலையும் ,மும்பையில் உள்ள பொருளின் விலையும் முற்றிலும் மாறுபடும்.ஆனால் தற்போது இந்தியா  முழுவதும் வரி முறைப்படுத்தப்பட்டு ஒரே வரியாக உள்ளது. ஜி .எஸ்.டி .என்கிற சரக்கு மற்றும் சேவை  வரியானது கடந்த 2017ஆம் ஆண்டு சுமார்  17 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது.இந்த வருடம் அதை விட அதிகமாக வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு இணை ஆணையாளர் பாண்டிராஜா பேசினார்.














                                      














No comments:

Post a Comment