Sunday 18 February 2018

பதை பதைத்த நிமிடங்கள் 

குத்துப்படாமல் பிழைத்த அதிசயம் 

கண் கண்ணாடி நொறுங்கிய கதை

மஞ்சு விரட்டு - பகுதி 1

நண்பர்களே , இன்று காரைக்குடி வைரவபுரம் பகுதியில் நடைபெற்ற மஞ்சு விரட்டை பார்க்க சென்று தப்பித்தோம்,பிழைத்தோம் என்று எங்களை காப்பாற்றி கொண்டு ஓடி வந்தோம்.



                                     இன்று காலையில் எனது மகன் என்னிடம் வந்து ,அப்பா வைரவபுரம் பகுதியில் மஞ்சு விரட்டாம் ,நாம் மாலை செல்லுவோமா? என்று கேட்டார்.நானோ,மாலையில் மஞ்சு விரட்டு முடிந்துவிடும்.நாம் மாலை 3 மணி அளவில் சென்று அந்த இடத்தை பார்த்து வருவோம் என்று சொல்லி விட்டு சென்றேன்.
                                          காலையில் நான் இன்று அறநூல் ஒப்புவித்தல் போட்டிக்கு எங்கள் பள்ளி மாணவர்களை அழைத்து சென்று விட்டு மதியம் இரண்டு மணி அளவில் வீட்டுக்கு வந்தேன்.பிறகு எனது மகனை பாட்டு வகுப்பில் இருந்து அழைத்து கொண்டு வந்தேன்.அப்போது மாலை 3 மணி இருக்கும்.எனது மகனோ,சரியாக வீட்டின் அருகே வரும்போது ,அப்பா காலையில் சொன்னீர்கள் அல்லவா ,மஞ்சு விரட்டுக்கு செல்வோம் என்று சொன்னார்.நான் சொன்னேன் அது காலையில் 10 மணி முதல் 12 மணிக்குள் முடிந்து விட்டது என்று.அதற்கு அவரோ,இல்லை அப்பா நீங்கள்தானே சொன்னீர்கள்,அந்த இடத்தை சென்று பார்க்கலாம் வாருங்கள் என்று சொன்னார்.நானும் சரி என்று சொல்லி விட்டு,அந்த இடத்தின் அருகே செல்லும்போது இருவரிடம் கேட்டேன்.சார்,மஞ்சு விரட்டு முடிந்து விட்டது என்று சொன்னார்கள்.நானும் சரி என்று வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு,எனது மகனை அழைத்து கொண்டு ,அங்கு சென்றேன்.அங்கு பாதி கூட்டம் அப்படியே கலையாமல் இருந்தது.அருகே சென்று விசாரித்தபோது,இன்னும் ஒரு மாடு விடுவார்கள் என்று சொன்னார்கள்.நானும் சரி என்று எனது மகனை அழைத்து கொண்டு அங்கு கட்டி இருந்த கம்பி அருகே சென்று பார்த்து கொண்டு இருந்தோம்.
                                தீடீர் என்று ஒரு மாடு எங்கள் கம்பிக்கு எதிரே நீண்ட தூரத்தில் ஒரு வட்டமிட்டு சுற்றி கொண்டு இருந்தது.கொஞ்ச நேரம் கழித்து ,திடீரென ,எங்கள் கம்பியை நோக்கி ஓடி வந்து,அப்படியே கம்பி பக்கம் சாய்ந்து இருந்த கம்புகளை தாண்டி எங்களின் அருகே வந்து விட்டது.எனது மகனோ பயத்தில் அலறுகிறார்.நானும் உடனடியாக என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து கொண்டு இருக்கும்போதே,கூட்டம் எங்களை மாட்டின் அருகே தள்ளி விட்டது .மாடு அருகில் நானும்,எனது மகனும் விழுந்து கிடக்கிறோம்.ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை.மீண்டும்,எப்படியோ எழுந்திருந்து சில அடிகள் வைத்து இருப்போம்,மீண்டும் எனது மகன் கால் தவறி விழ ,நானும் அவன் மேல் விழ எங்களின் சில அடி தூரத்தில் கோப கண்களோடு மாடு எங்களை பார்த்து கொண்டு உள்ளது.ஒரு சில நிமிடங்கள் தொடர்ந்து இருந்தால் ,மாடு குத்தி இருக்கும்.அதற்குள் மாடு பிடிப்பவர்கள் மாட்டின் கவனத்தை திசை திருப்ப நாங்கள் அருகில் இருந்த வீட்டுக்குள் தட்டு,தடுமாறி மன பதை ,பதைப்புடன் உள்ளே சென்றோம்.பிறகுதான் தெரிகிறது,எனது மகனின் கண்ணாடி அவனிடம் இல்லை.செருப்புகளும் இல்லை.அதற்குள்ளாக அந்த மாடு எங்களை கடந்து சென்று விட்டது.பிறகு பார்த்தால் தான் தெரிகிறது, எங்களின் அருகே எனது மகனின் செருப்பு அங்கொன்றும்,இங்கொன்றுமாய் கிடக்கிறது.அதன் அருகில் கண்ணாடி நைந்த நிலையில் நொறுங்கி கிடக்கிறது.பிறகு எங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டு அந்த வீட்டின் மாடி ஏறி சென்றோம்.அங்கு உள்ளவர்கள் ,எங்களை பார்த்து சார் நீங்கள் உயிர் பிழைத்ததே பெரிய அதிசயம் சார்.நல்ல வேலை தப்பித்து கொண்டீர்கள் என்று சொன்னார்கள்.எனக்கும் கீழே விழுந்ததில் கையில் லேசான காயம்.அதன் பிறகு வீட்டுக்கு செல்லலாம் என்று நினைக்கும்போது ,இன்னொரு மாடு பிடிபடாமல் எங்கள் முன்னால் வருவது தெரிந்ததும் மீண்டும் வீட்டுக்குள் சென்று வீட்டோம்.சுமார்ப் அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த மாடும் பிடிபடாமல் இருந்ததுடன்,அந்த இடத்திற்குள் இருந்த காடு போன்ற பகுதிக்கு சென்று விட்டது.
                                     பிறகு நாங்கள் இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.நண்பர்களே மஞ்சு விரட்டு பார்க்க செல்லும் நண்பர்கள் பாதுகாப்பாக எங்காவது ஒரு வீட்டுக்குள் சென்று நின்று கொண்டு பாருங்கள்.ஏனென்றால் ,மாடு பிடிக்க வருபவர்களும்,மாடு பிடிப்பதை பார்க்க வருபவர்களும் கண்ணா,பின்னா என்று ஓடுகிறார்கள்.எனவே கவனமாக செல்லுங்கள்.உயிர் மிக முக்கியம்.

லெ .சொக்கலிங்கம்,
காரைக்குடி .


பின் குறிப்பு : சில நாட்களுக்கு முன்பு நெற்குப்பை மஞ்சு விரட்டுக்கு சென்றேன்.அதன் அனுபவங்களை விரைவில் எழுதுகிறேன்.நன்றி.

























No comments:

Post a Comment