Monday 16 January 2017

அரசு மருத்துவருக்கு ஒரு சல்யூட்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மனித நேயமுடைய  இளம் வயது அரசு மருத்துவர் சிவசங்கரிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஏன் இந்த சல்யூட்? ஏன் இந்த பாராட்டு ?



                    நமக்கு தெரிந்து எத்தனயோ அரசு மருத்துவர்கள் அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.அவர்களில் சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவசங்கரி ஒரு சல்யூட்க்கு உரியவர்.தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிக்கு சில நாட்கள் முன்பு பொது மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அவரது மருத்துவ உதவியாளர்களுடன் வந்து இருந்தார்.மருத்துவ பரிசோதனையும் செய்தார்.பரிசோதனை முடித்து விட்டு செல்லும்போது என்னிடம் ( தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் ) சார், சில மாணவர்களுக்கு சிவகங்கையில் மேல் பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது.அதற்காக என்னுடைய முயற்சியில்  விரைவில் ஒரு வாகனம் ஏற்பாடு செய்து மாணவர்களை  அவர்களது பெற்றோருடன் சிவகங்கை தலைமை மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதனை செய்து மீண்டும் பள்ளியில் அழைத்து வந்து விடுகிறேன் என்று கூறி சென்றார்.
                 பள்ளிக்கு மாணவர்களை மருத்தவ பரிசோதனை செய்வதற்கு வரும்  பல அரசு மருத்துவர்கள் வந்து மாணவர்களை பரிசோதனை செய்து மேல் பரிசோதனைக்கு மற்றும் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை நோட்டில் எழுதி விட்டு சென்று விடுவார்கள்.ஆனால் வித்தியாசமாக ,மனித நேயத்துடன் மாணவர்களையும்,பெற்றோர்களையும் சிவகங்கை அழைத்து செல்கிறேன்  என்று அவர்  கூறிய இந்த வார்த்தைகள் எனக்கு புதியதாக இருந்தது.சரி நடக்கும்போது பார்த்து கொள்வோம் என்று நினைத்து கொண்டேன்.
                   ஆனால் மருத்துவர் சொன்னதை நடத்தி காட்டினார்.ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக அவரது உதவியாளர் செவிலியர் ரேவதி அவர்கள் மூலமாக என்னை தொடர்பு கொள்ள செய்ததுடன் , பெற்றோர்களையும் தொடர்பு கொண்டு அழைத்து செல்வது தொடர்பாக தெரிவித்தார்கள்.உண்மையில் தமிழகத்தில் உள்ள எத்தனயோ மருத்துவர்கள் பல நல்ல விசயங்களை செய்து வருகையில் அன்னாரது மனித நேய செயல்பாடு எங்கள் பள்ளியில் வெகுவாக பாராட்ட வைத்தது.அவரது உதவியாளர் செவிலியர் ரேவதி மிகவும் பொறுமையுடன் பெற்றோர்களுக்கு போன் செய்து விட்டு எனக்கு தொடர்பு கொண்டு சில பெற்றோர் வர மறுக்கின்றனர் என்று தெரிவித்தார்.
                     எங்கள் பள்ளியில் பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பவர்கள்.அவர்களிடம் பேசி ,அவர்களை புரிய வைத்து ஒரு நாள் வேலையை விட்டு.விட்டு அவர்களுடன் அழைத்து செல்வது என்பது மிக பெரிய செயல்பாடு.செவிலியரிடம் வரமாட்டேன் என்று கூறிய பெற்றோர்களை தேடி சென்று பள்ளியின் சார்பாக பேசி அவர்களை சம்மதிக்க வைத்தோம். செவிலியரிடம் நீங்கள் எதுவும் கவலை பட வேண்டாம். அனைத்து பெற்றோர்களையும் அழைத்து வருவது எங்கள் பொறுப்பு என்று கூறி விட்டேன். பிறகுதான் அது கொஞ்சம் சிரமம் என்று தெரிந்தது.ஏனெனில் செவிலியரிடம் எளிதாக சொல்லி விட்டேன்.ஏனெனில் பெற்றோர் அனைவரும் அவர்களுடைய குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னவுடன் முதலில் வருத்தப்பட்டனர்.அனைத்து பெற்றோர்களையும் அவர்களது குழந்தைகளுடன் அரசு மருத்துவர் ஏற்பாடு செய்த வாகனத்தின் மூலமாக செவிலியர் ரேவதி உதவியுடன்  சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அழைத்து சென்ற 9  மாணவர்களுக்கும் செவிலியர் ரேவதி உதவியுடன் சிவகங்கையில் சென்று அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடித்து மதியம் பள்ளிக்கு மீண்டும் அதே வண்டியில் திரும்பி வந்தனர்.
                  அப்போது பெற்றோர்கள் அனைவரும் செவிலியர்க்கும், மருத்துவர்க்கும் நன்றி சொன்னார்கள்.சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் அவர்கள் ஒவ்வொரு மாணவரையும் தனி,தனியாக அழைத்து சென்று அனைத்து இடத்திலும் தக்க ஆலோசனைகள் வழங்கி நல்ல முறையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உதவி செய்தததாக நன்றி கூறினார்கள்.தாங்கள் கூலி வேலை மற்றும் வீட்டு வேலை பார்ப்பதால் தங்களால் கண்டிப்பாக இது போன்று தனி பட்ட முறையில் இது போன்று நேரம் ஒதுக்கி ,செலவு செய்து தங்கள் பிள்ளைகளை சிவகங்கை அழைத்து சென்று மேல் பரிசோதனை செய்ய இயலாது.அதனை போக்கும் வகையில் மனித நேயத்துடன் உதவி செய்த மருத்துவர்க்கும்,செவிலியர்க்கும்,பள்ளி தலைமை ஆசிரியர்க்கும்,ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
              பள்ளியின் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ,மாணவர்கள் என அனவைரும் மருத்துவருக்கு ஒரு சல்யூட் வைத்து பாராட்டு தெரிவித்தனர்.
                         இது குறித்து மருத்துவர் சிவசங்கரி கூறுகையில், இது போன்று பல அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் பெற்றோர்கள் சிவகங்கை  அழைத்து செல்ல இயலாத நிலையில் நாங்கள் எங்கள் மருத்துவ உதவியாளர்கள் முயற்சியுடன் அழைத்து செல்கிறோம்.பல பெற்றோர்கள் உடன் எங்கள் அழைப்பை ஏற்று கொள்வதில்லை.இருந்த போதிலும் வியாதியின் தீவிரம் அறிந்து அவர்களுக்கு எடுத்து கூறி அழைத்து செல்கிறோம்.இது வரை சுமார் 175 மாணவர்களை இது போன்று மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளோம்.மேலும் 5 மாணவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கான உதவியும் செய்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து இன்று நல்ல நிலையில் மாணவர்கள் உள்ளனர்.இது எனது குழுவினரின் ஒத்துழைப்பாலும்,பள்ளிகளின் ஒத்துழைப்பாலும்,பள்ளி தலைமை ஆசிரியரின் ஒத்துழைப்போடும்,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் ஒத்துழைப்போடும் சிறந்த முறையில் செயல் படுத்தி வருகிறோம்.என்றார்.
                இளம் வயதில் இந்த மருத்துவர் சிவசங்கரி  ( வயது 25 ) அரசு பணியில் இருந்து கொண்டு மனித நேயத்தோடு செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது .

No comments:

Post a Comment