Wednesday 23 November 2016

வீட்டை நினைத்து கொண்டு சாலையில் பயணப்படாதீர்  
சாலை பாதுகாப்பு ஒரு வாக்கியம் அல்ல ! வாழ்க்கையின் வழி !
போக்குவரத்து ஆய்வாளர் அறிவுரை

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில் வீட்டை நினைத்து கொண்டு சாலையில் பயணப்படாதீர் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேசினார்.


                         விழிப்புணர்வு நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிறிஸ்டோபர் தம்பிராஜ் மாணவர்களிடம் பேசுகையில், சாலை பாதுகாப்பு ஒரு வாக்கியம் அல்ல ! வாழ்க்கையின் வழி ! என்கிற ஸ்லோகத்தை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள்.வீட்டை நினைத்து கொண்டு சாலையில் பயணம் செய்யாதீர்.அறிவியல் தொழில் நுட்பம் வளர,வளர மனித உயிர்கள் வேக,வேகமாக பலியாகி கொண்டிருக்கிறது.காரணம் தவறான முறையில் வாகனம் ஓட்டுவது ஆகும்.எனவே நீங்கள் சிறுவயது முதலே சாலை விதி முறைகளை தெரிந்து கொண்டு அதனை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.மனித உயிர் விலை மதிக்க முடியாதது.நாம் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.2015ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற சாலை விபத்துகளின் எண்ணிக்கை 67250 ஆகும்.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95343 ஆகும்.இந்தியாவில் விபத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு ஒரு விபத்து நடக்கிறது.ஒரு மணி நேரத்தில் 16 பேரும் , ஒரு நாளைக்கு 377 பேரும் விபத்தால் பாதிக்கபடுகிறார்கள்.சாலை போக்குவரத்தில் எச்சரிக்கை சின்னங்கள் 37 ம், உத்தரவு சின்னங்கள் 38 ம் ,தகவல் சின்னங்கள் 16 என மொத்தம் 91 சின்னங்கள் உள்ளன. சைக்கிளில் செல்லும்போது ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும்.குறுகலான தெருக்களில் இருந்து நெடுஞ்சாலைக்கு வரும்போது நாம்தான் பார்த்து மிக கவனமாக வரவேண்டும்.வாகனம் ஓட்டுவதற்காக எடுக்கும்போதே வாகனத்தில் ப்ரேக் இருக்கிறதா,டயர்களில் காற்று இருக்கிறதா என செக் செய்து கொள்ள வேண்டும்.என்று பேசினார்.
                      முதல் நிலை காவலர் அசோகன் பத்து வகையான முக்கிய சிக்னல் தொடர்பாக குறிப்பக இடது கை சாலையை கடத்தல்,முன்னால் செல்லும்  வாகனம் வருவதை கையை தூக்கி நிறுத்துதல், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரும்போது இரண்டு கைகளையும் தூக்கி அனைத்து வாகனங்களையும் நிறுத்தி குறிப்பிட்ட வாகனத்துக்கு வழி விடுதல் போன்ற தகவல்களை  நேரடி விளக்கம் அளித்தார்.இரவில் மிளிரும் கையுறைகள் , பகலில் பயன்படுத்தும் கையுறைகள், இரவில் மிளிரும் சிக்னல் தொடர்பான விளக்குகள், பாதிப்பு ஏற்பட்ட வாகனத்தை அறிந்து கொள்ளும் வகையில் உள்ள கூம்பு வடிவங்கள் என அனைத்து தகவல்களையும் நேரடியாக விளக்கி கூறினார்கள். மாணவர்கள் ஜீவா,ஐயப்பன்,சின்னமாள்,பரமேஸ்வரி,தனலெட்சுமி,ஜெகதீஸ்வரன்,வெங்கட்ராமன்,கார்த்திகா ,பரத்குமார் உட்பட பல மாணவ,மாணவியர் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிறிஸ்டோபர் ,முதல் நிலை காவலர் அசோகன் முக்கிய சாலை பாதுகாப்பு தொடர்பாக நேரடி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உள்ளார்.







போக்குவரத்து ஆய்வாளர் மேலும் சாலை பாதுகாப்பு தொடர்பாக பேசியதாவது : சாலையில் நடக்கும் அனைவரும் பேசிக்கொண்டோ,விளையாடி கொண்டோ செல்லக்கூடாது.அவ்வாறு சென்றால் விபத்து நேரலாம்.பேருந்தில் உள்ளே செல்ல வேண்டும்.படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம்.பேருந்தின் பின் புறம் சென்று சாலையை கடக்க கூடாது.பெண்கள் வாகனத்தில் பயணிக்கும்போது தங்களது கை பை,துப்பட்டா ஆகியவற்றை சரியாக வைத்து கொள்ள வேண்டும்.செல் போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டகூடாது.பள்ளி,கல்லூரி,மருத்துவமனை ,பேருந்து நிலையம் போன்ற இடங்களில் நின்று,கவனித்து பாதுகாப்பாக விழிப்புணர்வுடன் செல்ல வேண்டும்.வாகனத்தில் செல்லும்போது மனநிலையை கட்டுபடுத்தி வாகனம் ஓட்ட வேண்டும்.வாகனம் ஓட்டுவதை மட்டுமே கவனத்தில் வைத்து ஓட்ட வேண்டும்.91 வகையான சாலை பாதுகப்பு சின்னங்களை தெரிந்து கொண்டால் விபத்து ஏற்படாது.வேகத்தடை ,குறுகிய சாலைகளில் நாம் தான் கவனமுடன் செல்ல வேண்டும்.அதிக சப்தம் எழுப்பும் ஹரன்களை பயன்படுத்த கூடாது.கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்த கூடாது.
                          சாலை பாதுகாப்பு தொடர்பாக ஆய்வளர் கவிதை ஒன்றை  அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி சொன்னார்.பின்வருமாறு கவிதை .
·         விபத்து நேரம் என்று இல்லை,எந்த நேரமும் நிகழலாம்
·         வாகனங்களுக்கும்,சாலைகளுக்கும் தெரியாது நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்று.
·         விரைந்து செல்லும் வாகனங்களுக்குத் தெரியாது நீதான் எங்கள்வீட்டின் செல்லப் பிள்ளை ,விடியல் என்று.
·         பாசபிள்ளை,ஏழை,பணக்காரன்,உயர்ஜாதி,கீழ் சாதி,எந்த சமூகம் என்று தெரியாது.
·         முந்தி செல்லும் முன் ஓட்டுனருக்கு தெரியுமா? நீதான் எங்கள் வீட்டு முகவரி என்று
·         கனரக வாகனங்களுக்கு தெரியுமா? நீதான் எங்கள் வீட்டு கண்மணி என்று.விடியலும் நீ,விலாசமும் நீ,நம்பிக்கை நீ,எதிர்காலம் நீ என்று நம்பி இருக்கிறோம்.
·         உனக்கு பட்ட படிப்பும்,ஞானமும்,விவேகமும் உன்னைக் காப்பாற்றி கொள்வதற்கு தான் என்று உணர்ந்து கொள்ளும் வரை
·         ஐந்து நிமிடம் காத்து இருந்து அடுத்து வரும் பேருந்துக்காக காத்திருக்க முடியாதா  உனக்கு? ( பொறுமையாக )
·         காலமெல்லாம் உன்னோடு இருப்பேன் என்று கட்டிய தாலி நினைவிருக்கிறதா ? விரல் பிடித்து நீ நடந்த கரை தாண்டவும் ,கடல் தாண்டவும்,உன் நிழல் நான், தந்தையாகிய நான் விழித்திருப்பேன் நீ வரும் வரை .
·         படிப்பதற்கு ,அலுவலகத்திற்கு தானே சென்றாய்
அப்படியே திரும்பி வருவாய் என நண்பர்கள்,உறவினர்கள்
அம்மா,அப்பா காத்திருக்கிறோம்.உடையாமலும்,உரசாமலும்
கவனமுடன் திரும்பி வா!
·         நீ செல்லும் பாதைகள் பயணமாக இருக்கலாம்.காத்திருக்கும் எங்களுக்குத்தான் தெரியும் கலானிடம் போராடிகொண்டிருக்கிறோம் என்று .
·         அம்மா,அப்பா ,அண்ணன் ,அக்கா,தம்பி,தங்கை ,மனைவி ,பிள்ளைகள் ,உறவினர் என்று வாழகிடைத்த இந்த வாழ்க்கை வரம்  என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
·         தொங்கி செல்வது ,துரத்தி,செல்வது,முந்தி செல்வது உங்கள் குருதியின் வேகமாக இருக்கலாம்.ஆனால் எமனிடம் இருந்து எப்போதும் தப்பித்து கொள்ள முடியாது.
·         இனி திருந்தி கொள்வதும் ,திருத்தி கொள்வதும் உங்கள் கடமை.
·         இனிய வாழ்க்கை பயணத்தில் அதிவேக , கோர சாலை பயணங்களை தவிர்ப்போம் !
·         சாலை விதிகளை மதிப்போம் !
·         விபத்தினை தவிர்ப்போம் !
·         விலை மதிப்பில்லா உயிர்களை காப்போம்!
·         விவேகத்தோடு செயல்படுவோம் !
·         என்ற உறுதிமொழி இன்றே,இப்போதே ஏற்போம் !
·         விபத்தில்லா நகரம் !வியப்புடன் !
என்று கவிதை வசித்தார்.  




No comments:

Post a Comment