Monday 24 November 2014

ஓய்வுபெற்ற பின் பி.எப் கணக்கை முடிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பிஎப் கணக்கை முடித்து செட்டில்மென்ட் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி அடுத்த மாதம் அமலாகிறது.
இதன்மூலம் 3 நாட்களுக்குள் பணம் பெறலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) திட்டத்தில் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் பணம் நிறுவன பங்களிப்புடன் சேர்த்து சேமிக்கப்படுகிறது. பணியில் இருக்கும்போதே இதில் குறிப்பிட்ட தொகையை வீட்டுக்கடன், திருமண செலவு போன்றவற்றுக்காக பெறும் வசதியும் உள்ளது. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முழு பணமும் பெற ஊழியர்கள் நேரடியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வந்தனர். தற்போது ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அமல்படுத்த பிஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: பிஎப் கணக்கை முடித்து பணம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அடுத்த மாதம் மத்தியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிஎப் மற்றும் வங்கி கணக்கை ஆதார் எண் மூலம் இணைத்துள்ள சந்தாதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை, கருவிழி உட்பட அனைத்தும் பதிவு செய்யப்படுவதால் முறைகேடு நடப்பதற்கு வழியில்லை. மேலும், தற்போதுள்ள நடைமுறையின்படி, சந்தாதாரர் பணம் பெறுவதற்கு, விண்ணப்பத்தில் தவறுகள் உள்ளிட்ட பல காரணங்களால் 30 நாட்களுக்கு மேல்கூட ஆகிவிடுகிறது. ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்படும் புதிய முறையில் மூன்றே நாட்களில் பணம் கிடைக்க வழிவகுக்கிறது என்றனர்.

தொழிலாளர் ஒருவர் வேறு ஒரு நிறுவனம் மாறும்போது ஏற்படும் சிக்கலை தீர்க்க, பிஎப் நிறுவனம் நிரந்தர கணக்கு எண் அளித்துள்ளது. இந்நிலையில் புதிய திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. புதிய திட்டத்தின்படி 30 சதவீதம் வரையிலான பிஎப் கோரிக்கைகளை ஆன்லைன் மூலம் தீர்க்க பிஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment