Wednesday 28 May 2014

பி.இ. படிப்பு: குறைந்து வரும் மோகம்: 1.75 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிப்பு


பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.
கடந்த 2013-14 கல்வியாண்டில் ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 90 ஆயிரத்து 850 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இம்முறை 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருக்கின்றனர்.
விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதால், மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகள் மீதான மோகம் குறைந்துள்ளதாகவே கருதப்படுகிறது.
பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 2014-15 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப விநியோகம் மே 3-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டது. இதில் மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 600 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
விண்ணப்பித்தவர்கள் குறைவு: பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க காலக் கெடு செவ்வாய்க்கிழமை (மே 27) மாலை 6 மணியோடு முடிந்து விட்ட நிலையில், 1 லட்சத்து 72 ஆயிரத்து 500 பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்
துள்ளனர்.
தபால் மூலம் மேலும் 2,500 பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வர வாய்ப்பு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். எனவே, கலந்தாய்வுக்கு இம்முறை ஏறக்குறைய 1.75 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பிப்பார்கள் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர 15 ஆயிரம் பேர் இந்த முறை குறைவாக விண்ணப்பித்துள்ளனர்.
இடங்கள் குறைவு: கடந்த 2013-14 கல்வியாண்டில் கலந்தாய்வு மூலம் பொறியியல் சேர்க்கைக்கு 2 லட்சத்து 5 ஆயிரத்து 463 பி.இ. இடங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், இம்முறை பல பொறியியல் கல்லூரிகள் பல்வேறு பொறியியல் பிரிவுகளை கைவிட்டுள்ளன, சில கல்லூரிகள் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்துள்ளன.
இதன் காரணமாக 2014-15 கல்வியாண்டு பி.இ. கலந்தாய்வில் 2 லட்சத்துக்கும் குறைவான பி.இ. இடங்களே இடம்பெற்றுள்ளன.
அதே நேரம், இம்முறை விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கை 1.75 லட்சம் என்ற அளவில் இருப்பதால், விண்ணப்பித்த அனைவருக்கும் பி.இ. இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment