Tuesday 27 May 2014

சென்னை: இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ் உள்ள இடங்கள், முழுமையாக நிரம்ப, மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அமைச்சர் வீரமணி, எச்சரித்து உள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் அடங்கிய ஆய்வு கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. துறை அமைச்சர், வீரமணி தலைமையில் நடந்த கூட்டத்தில், துறையின் முதன்மை செயலர், சபிதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன், மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் உட்பட, பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாலை வரை, நடந்த கூட்டத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி நிலவரம், அதில், அரசு பள்ளிகளின் பங்களிப்பு மற்றும் ஜூன் 2ம் தேதி, பள்ளி திறந்ததும், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது.

மாலையில், பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்ட அறிக்கை: பொதுத்தேர்வுகளில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 'வரும் (2014-15) கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை, மேலும் உயர்த்த, அதிகாரிகள் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அமைச்சர் வலியுறுத்தினார். ஆர்.டி.இ., இடங்கள் முழுவதும் நிரம்புவதை, மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், அமைச்சர் கேட்டுக் கொண்டார். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார். ஆர்.டி.இ., இடங்களை ஒதுக்கீடு செய்ய, தனியார் பள்ளிகள் மறுத்து வருகின்றன. போதிய அளவிற்கு விண்ணப்பம் வழங்காததால், வரும், 31ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்க, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை உத்தரவிட்டு உள்ளார். எனினும், அதிக அளவிற்கு விண்ணப்பம் வழங்கவில்லை. ஆர்.டி.இ., விவகாரம் குறித்து, கூட்டத்தில், அமைச்சர், கடும் எச்சரிக்கை விடுத்ததாக, துறை வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment