Monday 26 May 2014

அந்த இலக்கை அடைய இதை அறியுங்கள்!


உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்பது பேரவா! ஆனால், அதற்கான வழிமுறைகள்தான் பலருக்கும் தெரிவதில்லை. நம்மை நாமே தெளிவாக அறிந்து, நமது விருப்பங்கள், அதை அடையும் வழிகள் ஆகியவற்றை சரியாக கணித்து, அதற்கேற்ப செயல்பட்டால் வெற்றியாளர் என்ற அந்தஸ்தை அடைவது சாத்தியமே
.
ஒருவர் உண்மையில் விரும்புவது எதை?
தலைமைத்துவத்திற்கான முதல் தேவை எதுவெனில், ஒருவர் எதை விரும்புகிறார் என்பதை மிகச் சரியாக அறிந்து கொள்வதுதான். ஒருவர் ஒரே நேரத்தில் பலவிதமான அம்சங்களை விரும்பலாம். ஒருவரின் ஒரு விருப்பம் அடையப்பட்டு விட்டால், அந்த இடத்தை அடுத்த 100 புதிய விருப்பங்கள் அணிவகுத்து வந்து அமர்ந்து கொள்ளும்.
எனவே, தலைமைத்துவப் பதவிக்கு வர விரும்பும் ஒருவர், தெளிவாக சிந்தித்து, தனது நீண்டகால மற்றும் குறுகியகால இலக்குகளை நிர்ணயம் செய்து, தனது பல்வேறுபட்ட விருப்பங்களுக்கான முன்னுரிமைகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
அதேசமயம், ஒன்றுடன் ஒன்று அதிக முரண்டபாடுள்ள விருப்பங்களை ஒருவர் வைத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் அதனால் பல வேண்டாத சிக்கல்கள் ஏற்படும்.
நீங்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பதவி உயர்வை அடைய விரும்பினால், உங்களின் வருமானத்தை உயர்த்திக்கொள்ளும் பொருட்டு, வேறு இடங்களில் பகுதிநேர பணியில் சேர்ந்து ஈடுபடுதல் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், உங்களின் கல்வியில் நீங்கள் சிறந்து விளங்க விரும்பினால், அரட்டை அடித்தல், திரைப்படம் பார்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நீங்கள் செலவழிக்கும் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும்.
நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக நிர்ணயித்து, அதை அடைவதற்கேற்ற வழிகளை முடிவுசெய்து, அதற்கேற்ப உங்களின் உடல் மற்றும் மனஆற்றலை ஒருமுகப்படுத்தி செலவழிக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைதான் வெற்றியை அடைவதற்கான சிறந்த ஒன்றாகும்.
வெற்றியின் ரகசியம்
உலகின் பிரபல மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை நீங்கள் படித்துப் பார்த்தால் ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதாவது, மக்களோடு தங்களை வெற்றிகரமாக இணைத்து, அதன்மூலம் தங்களின் சிறப்பம்சத்தை அவர்களிடையே வெளிப்படுத்தி, தங்களை சிறப்பானவர்களாக்கிக் கொள்ளும் வித்தையை அவர்கள் நன்கு கற்றவர்களாக இருக்கிறார்கள்.
அயலார், நண்பர்கள், மேலதிகாரிகள், உடன் பணிபுரிவோர், கீழ்பணியாற்றுவோர், அண்டை வீட்டார், உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் ஆகிய யாராக இருந்தாலும், தாங்கள் அன்றாடம் அல்லது அடிக்கடி சந்திக்கும் நபர்களின் மத்தியில் தன்னை முக்கியத்துவப் படுத்திக்கொள்ளும் வித்தை அறிந்தவர்தான் வெற்றியாளராக ஆகிறார்.
மக்களின் ஆர்வத்தையும், விருப்பத்தையும், அவர்கள் இளையோரோ, முதியோரோ, ஆணோ, பெண்ணோ, கற்றவரோ, கல்லாதவரோ, எப்படி தூண்டி, அவர்களை தன்பால் வசப்படுத்துவது என்ற கலையை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியவரும்.
எனவே, மனிதர்களை வெல்லும் கலையை நன்கு கற்றறிந்து, அதில் வெற்றி கண்டால் மட்டுமே, ஒருவர் இந்த உலகில் வெற்றிகண்ட ஒரு மனிதராக பரிணமிக்க முடியும்.

No comments:

Post a Comment