Tuesday 27 May 2014

பி.இ. விண்ணப்ப தேதி: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு நீட்டிக்கப்படுமா?


சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்காக பி.இ. விண்ணப்ப தேதியை நீட்டிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் கூறினார்.
பி.இ. பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு காரணமாக, சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் இந்த ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றன. எனவே, இதன் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு மே 3-வது வாரத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த மாணவர்களின் நிலை குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் கூறியது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஜூலையில் முடிக்கப்பட வேண்டும். அதற்காகவே, விண்ணப்ப விநியோகம் சற்று முன்னதாக தொடங்கப்பட்டுள்ளது.
இதில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டால், ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டி, விண்ணப்ப விநியோக தேதியை நீட்டிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
இந்தத் தேர்வு முடிவுகள் மே 20-ஆம் தேதிக்குள் வெளியிடப்பட்டால், மாணவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த மதிப்பெண் பட்டியலை முதலில் இணைத்துவிட்டு, மதிப்பெண் சான்றிதழ் நகலை பின்னர் அனுப்ப அனுமதி தருவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும். இந்த நடைமுறை கடந்த ஆண்டு பின்பற்றப்பட்டது. அதே நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்படலாம்.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை, சி.பி.எஸ்.இ. அமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஓரிரு நாளில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்றார் அவர்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் மே 14-ஆம் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் போதுமானது. விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை வரும்
மே 30-ஆம் தேதி வரை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 2 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், அசல் சான்றிதழ் கிடைக்கப் பெறாத நிலையில் விண்ணப்பத்துடன் கடந்த ஆண்டைப் போலவே மதிப்பெண் சான்றிதழின் நகலை இணைத்து அனுப்பினால் போதுமானது என மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பிரச்னை எதுவும் இருக்காது எனத் தெரிகிறது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம் குறித்த மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிக்கை வரும் 11-ஆம் தேதி வெளியாகிறது.

No comments:

Post a Comment