Friday 30 May 2014

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு

 ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம்,

ஓய்வூதியப் பலன்கள் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி ராஜாதங்கம் உட்பட, நான்கு பேர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு துவக்கப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றோம். துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, மாற்றியமைக்கப்பட்ட சம்பள விகிதம், 1988 ஜூன் முதல் அமல்படுத்தப்பட்டது. எங்கள் பணிக்காலத்தில் இடைநிலை ஆசிரியர்களிலிருந்து, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட, 174 பேருக்கு, சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, சம்பள விகிதத்தை மாற்றியமைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. எங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சம்பள விகிதம், ஓய்வூதியப் பலன்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்களின் மனுவை, பள்ளிக் கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குனர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment