Tuesday 27 May 2014


சென்னை: பொறியியல் படிப்பில் சேர, 2.12 லட்சம் மாணவர்கள், ஆர்வம் காட்டி உள்ளனர். நேற்று வரை, 1.7 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில் பெறப்பட்டுள்ளதாக, அண்ணா பல்கலை தெரிவித்தது. கலந்தாய்வுக்கு, 2.12 லட்சம் இடங்கள் கிடைக்கும். எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும், 'சீட்' கிடைக்கும்.


மாநிலம் முழுவதும், 56 மையங்களில், கடந்த, 3ம் தேதி முதல், நேற்று மாலை, 5:30 மணி வரை, பி.இ., விண்ணப்பம், வினியோகிக்கப்பட்டது. முதல் நாளில், 70,212 விண்ணப்பங்களை, மாணவர்கள் பெற்றனர். தொடர்ந்து, மாணவர்கள், போட்டி போட்டுக்கொண்டு, விண்ணப்பங்களை பெற்றனர். விறுவிறு விற்பனை : கடைசி நாளான நேற்று, விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அண்ணா பல்கலையில் சமர்ப்பிக்கவும், மாணவர்கள் குவிந்தனர். நேற்று காலை முதலே, மாணவர்கள், ஏராளமானோர், அண்ணா பல்கலைக்கு வந்தபடி இருந்தனர்.

விண்ணப்பம் விற்பனை, பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து, பொறியியல் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரிய ராஜ் கூறியதாவது: இறுதி நிலவரப்படி, 2.12 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகி உள்ளன. இதுவரை, 1.7 லட்சம் விண்ணப்பங்களை, பூர்த்தி செய்த நிலையில் பெற்றுள்ளோம். பதிவு அஞ்சல் மூலம், அதிக விண்ணப்பங்கள் வருகின்றன. எனவே, வெளி மாவட்டங்களில், இன்று விண்ணப்பங்களை பெற்ற மாணவர்கள், பதிவு அஞ்சல் மூலம் அனுப்புவர். அந்த விண்ணப்பங்கள், நாளை (இன்று) மற்றும் அதற்கு மறுநாளும் (29ம் தேதி) வரும். பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 29ம் தேதி தான், சரியாக தெரியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். விண்ணப்பங்களை பெற்ற மாணவர்கள் அனைவரும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 2.12 லட்சம் விண்ணப்பங்களும், அண்ணா பல்கலைக்கு, வந்து சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment