Saturday 24 May 2014

பறவைகள் இல்லா உலகில் மனிதர்கள் வாழ முடியாது சுற்றுச்சூழல் ஆய்வாளர் கோவை சதாசிவம் பேச்சு


திருச்சிராப்பள்ளி, மே 24-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ‘வயல்’ மாதக் கூட்டம் திருச்சி செவனா ஓட்டலில் நடைபெற்றது.மாவட்டப் பொருளாளர் வழக்கறிஞர் ரங்கராஜன் தலைமை வகித்தார்.
துறையூர் முருகேசன் எழுதிய ‘பச்சை மலைக்குயில்’ என்ற சிறுகதைத் தொகுப்பை, தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் நந்தலாலா வெளியிட அதை தமுஎகச மாவட்டத் தலைவர் கவிஞர் இளங்குமரன் பெற்றுக்கொண்டார்.எழுத்தாளரும், சுற்றுச்சூழல் ஆய்வாளருமான கோவை.சதாசிவம் ‘பறவைகள் பலவிதம்‘ என்ற தலைப்பில் பேசியதாவது:இன்றைய தினத்தில் 20 பறவைகளின் பெயர்களைக் கூட தொடர்ந்து சொல்ல முடியாத நிலையில் நாம் உள்ளோம். காக்கை ஒரு சிறந்த துப்புரவு பணியாளர். அது நாட்டில் உள்ள மோசமான கழிவுகளை எல்லாம் சாப்பிட்டு நகரை சுத்தமாக வைத்து கொள்ள உதவுகிறது.
காக்கை தனது வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான மரங்களை நடுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இருவாச்சி என்ற பறவை முதல் முதலில் தான் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத் துணையுடன் கடைசிவரை வாழும் பறவையாகும். அதோடு மட்டும் இல்லாமல் பெண்பறவை அடைக்காக்கும் நாட்களில் கூடவே இருந்து பெண்பறவையை பாதுகாக்கும். கேரள மாநிலச் சின்னமாக இருவாச்சி பறவை உள்ளது. தூக்கணாங்குருவியிடம் இருந்துதான் மனிதன் கட்டிடக்கலையை கற்றுக்கொண்டுள்ளான். அமெரிக்காவில் உள்ள ராபின் என்ற பறவை, கோடைக்காலம் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் பறவையாகும்.
இந்த பறவை இனம் அழியாமல் பாதுகாக்க அமெரிக்க அரசு ஒரு குறிப்பிட்டரசாயன மருந்தை அமெ ரிக்காவில் உபயோகிக்கத் தடைவிதித்துள்ளது. பறவைகளால் பயிர்கள் அழிக்கப்படுவதில்லை பயிர்களில் உள்ள பூச்சிகளை பறவைகள் உண்ணுவதால், அதன் கழிவுகள் இயற்கை உரமாக அமைந்து பயிர்கள் செழித்து வளர்கின்றன. மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகள் வாழும். ஆனால் பறவைகள் இல்லாத உலகில் மனிதனால் வாழ முடியாது.இவ்வாறு சதாசிவம் கூறினார்.முன்னதாக மாவட்டக்குழு உறுப்பினர் கவிஞர் கீரைத்தமிழன் வரவேற்றார். மாவட்டக்குழு கவிஞர் ஹரிபாஸ்கர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment