Wednesday 28 May 2014

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் ஜூன் 2-இல் பதிவேற்றம்


பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் கோரிய 80 ஆயிரம் பேரின் விடைத்தாள் நகல்கள் ஜூன் 2-ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

அதன் பிறகு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்காக 4 அல்லது 5 நாள்கள் அவகாசம் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. பள்ளிகளின் மூலம் 8.20 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இதில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.
பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14 வரை பள்ளிகளின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, விடைத்தாள் நகல் கோரி 79,953 பேரும், மறுகூட்டல் கோரி 3,346 பேரும் விண்ணப்பித்தனர்.
முக்கியப் பாடங்களுக்கான இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாட விடைத்தாள்களைக் கோரி 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ள பாடங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே விடைத்தாள் நகல்களைக் கோரியுள்ளனர். சென்னையில் உள்ள விடைத்தாள் மறுமதிப்பீட்டு முகாமில் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறியது:
பிளஸ் 2 விடைத்தாள்களை ஸ்கேன் எடுக்கும் பணி ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் பக்கங்களைச் சரிபார்க்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு அனைத்துப் பாட விடைத்தாள் நகல்களையும் மாணவர்கள் ஒரே நாளில் பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட உள்ளன. அதன் பிறகு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க 4 அல்லது 5 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 வரை அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகு, ஜூன் 10-ஆம் தேதிக்குள் மறுமதிப்பீடு செய்து முடிவுகள் வழங்கப்படும். மறுகூட்டல் முடிவுகளும் அப்போதே வெளியாகும்.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தால் மதிப்பெண் குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை பாட ஆசிரியர்களுடன் முழுமையாக ஆராய்ந்த பிறகே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களிடம் இது தொடர்பாக உறுதிமொழியும் பெறப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment